Saturday, June 17, 2017

என்ன படிக்க வைக்கலாம் ?

என்ன படிக்க வைக்கலாம் ?
வளரிளம் பருவத்தில் குழந்தைகள் இருக்கும் அனைவரின் முன்னிற்கும் ஒரு பெருங்கேள்வி. ஒவ்வொரு துறைகளில் கால மாறுதல்கள் மூலம் வரும் வேலை வாய்ப்புகளும், வேலையின்மைகளும் செய்தி வியாபாரிகளின் பரபரப்புத் தகவல்களும் , கல்வி வியாபாரிகளின் மயக்குப்பேச்சுகளும், அக்கம் பக்கம் மற்றும் சுற்றத்தோரின் அழுத்தங்கள் என ஆபத்தான அரங்கு.
எப்படி ஒரு மேற்படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கான சில சிந்தனைகளின் பதிவிது.
இன்றைய கல்வித்திட்டத்தில் மேல் நிலை பள்ளிக்கல்வி முடிக்கும் ஒரு மாணவன்/மாணவியின் முன் மிகப் பிரகாசமான வாய்ப்புகள் திறந்திருக்கின்றன. ஒவ்வொரு பிரிவையும் அதன் நிறை/குறையையும் இங்கு கொஞ்சம் அலசுவோம். (பி.கு. துறை வாரியாக, அதாவது பொறியியல், மருத்துவம், கணக்காளுதல் / பொருளாதாரம் என எடுத்துக்கொண்டு நிறை குறை அலசப்புறப்பட்டேன். பின் அதன் ஆழமும் அகலமும் தெரிந்து,  வேறு சில சொல்லி நிறுத்தினேன் :) )
முதற்கண் மாணவனின் தீவிரம்/ஆர்வம். உதாரணத்திற்கு எனக்கு Mechanical Engineering படிக்க ஆசை என்று ஒரு மாணவன் கூறும் பட்சத்தில் முதலில் ஏன் அந்த விருப்பம் என்பதை நாம் பேசித் தெரிந்து கொள்ளவேண்டும். இப்போது அதற்கு அதிக வேலைவாய்ப்பிருப்பதாலா ? அல்லது ஏதேனும் அண்ணன் , நண்பரின் அண்ணன் அது படித்து சிறப்பாக வேலை அமைந்து விட்டதாலா, அல்லது Mechanical engineeringன் இன்றைய சாகசங்கள் ஏதேனும் அவனை ஈர்த்து அதில் தானும் சாதிக்க வேண்டும் என விரும்புகிறானா என்பது போன்ற சாத்தியங்களை ஆராய வேண்டியிருக்கிறது.
முதலிரு காரணங்கள் அல்லது அது போன்றவை என்றால் வேலை எளிது. Campus Placement சிறப்பாக நடக்கின்ற கல்லூரிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதில் சேர்வதற்கு தகுதிப்படுத்திக்கொள்வதே .. Market Dynamics மற்றும் Wisdom of the crowd, பட்டியலின் மேலே சென்று தேர்வு செய்யச்செய்ய சிறப்பு அதிகமானதைக் கொடுத்து விடும். அப்படித்தேர்வு செய்தாலும் சேர்ந்தபின் அத்துறை மீது ஒரு ஆழ்ந்த விருப்பத்தை உருவாக்கி அதில் சாதிக்க வேண்டும் / ஏதேனும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து அதற்கேற்ப படிக்கவில்லையேல் அங்கு ஒரு சராசரியாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம்
ஒரு குறிப்பிட்ட துறையில் சாதிக்க , சிறக்க விரும்பும் மாணவர்கள் (மேல் நிலைப்பள்ளி படிக்கும் போதே அதுபோன்ற குறிக்கோள் உடையோர் ) சற்று மாறுபட்ட அணுகுமுறை கையாள வேண்டும். கல்லூரி முடிவு செய்கையில் நான்கு  விஷயங்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒன்றனை ஒன்று சார்ந்தவையே..
1. ஆசிரியர் குழாம் (faculty )
2. வசதிகள் / கட்டமைப்புகள் (facilities / machines / lab time policies  etc )
3. அத்துறை சார்ந்த, அதில் உயர் தொழில் நுட்பத்தில் உருவாக்கும் தொழில் நிறுவனங்கள் அந்த ஊரில் உள்ளனவா?
    ஏதேனும் தொழிலக - கல்வியக ஒத்துழைப்பு நடந்து கொண்டிருக்கின்றதா? (industry - institution co-operation /partnership , internships )
மேற்கூறியவற்றின் பயன் நான்காவதாக அதன் placement ல் நன்கு தெரியும். core  companies  எவ்வளவு பேரை வேலைக்கெடுத்துள்ளனர், என்னென்ன மாதிரி வேலைகளுக்கு என்பது ஒரு முக்கிய தகவல். முடிந்தால் 2 batchற்கு முன்னால் place ஆனவர்களது தொடர்பெண் / மின்னஞ்சல் கிடைத்தால் அவர்களைத் தொடர்பு கொண்டால் கிட்டத்தட்ட சரியான ஒரு படம் கிடைத்து விடும். தற்போதைய batch ன் கருத்துக்களும் முக்கியம். (இதுபோன்ற தகவல் சேகரிப்பு குழுவாக செய்து பகிர்ந்து கொள்வதே சாத்தியம்)
IT / கணினியியல் படிப்பதும் அத்துறையில் ஏதேனும் உருவாக்குவதற்காக இருக்க வேண்டும். உருவாக்கும் வாய்ப்பு தராத படிப்பும் வேலையும், எவ்வளவு அதிக சம்பளம் தரும் வேலையைக்கொடுத்தாலும் விரைவிலேயே பிரச்சினைகளில் கொண்டுவிடும்.
உலக அளவில், உலகத்தரத்தில், நம்மூரில் உட்கார்ந்தபடியே உருவாக்க கணினியியல் (அதிலும் செயலி ஆக்கம்) போல் உகந்தது வேறொன்றும் தெரியவில்லை

முன்பெல்லாம் பத்தாவது/பன்னிரெண்டாவது படித்தவுடன் தட்டச்சு / குறுக்கெழுத்து படிக்க வைத்து விடுவார்கள். அதுபோல கல்லூரிப்படிப்பு முடிவதற்குள் செயலியாக்கம் அறிந்திருக்க வேண்டும். செயலியாக்கம்  (software development மற்றும் programming) பற்றிய அடிப்படை அறிவும் ஏதேனும் ஒரு கணினி மொழியில் அடிப்படை செயலியாக்கம் அறிந்திருப்பதும் அனைத்து துறை மேற்படிப்பிற்கும் மிகப்பெரிய competitive advantage கொடுக்கும். கல்லூரி முடிப்பதற்குள் செயலியாக்கம் எந்த ஆழத்தில் முடியுமோ அந்த அளவுக்கு எல்லா துறையினரும் கற்க வேண்டும். இப்போதெல்லாம் ஒரு மடிக்கணினி இருந்தால் இணையம் என்னும் துரோணாச்சாரியார் சொல்லிக்கொடுத்துவிடுவார். (கட்டை விரலெல்லாம் வெட்டிக் கொடுக்க வேண்டாம். கட்டை விரல் உயர்த்தி ஒரு emoticon போட்டால் போதும்.)